கோவையில் காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது


கோவையில் காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 6 Jun 2017 4:00 AM IST (Updated: 6 Jun 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகுந்தது பீதியில் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர்

கோவை,

கோவையில் காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து வீட்டுக்குள் முடங்கினர்.

4 பேரை கொன்ற யானை

கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை, குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியில் சாலையை கடந்து, கடந்த 2–ந் தேதி ஊருக்குள் புகுந்தது. அந்த யானை, சிறுமி உள்பட 4 பேரை மிதித்து கொன்றது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.

மீண்டும் காட்டு யானை புகுந்தது

இந்த பரபரப்பு மறைவதற்குள் கோவை நகருக்குள் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஒரு காட்டு யானை புகுந்தது. 15 வயது மதிக்கத்தக்க அந்த யானை கோவைப்புதூர் அறிவொளி நகர் வழியாக சென்று, பிரஸ் என்கிளேவ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

அங்கு ஒரு வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தின் ஓலையை ஒடித்து தின்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள இரும்பு கம்பிவேலியை சாய்த்தது. பச்சாப்பள்ளி அருகே உள்ள வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து நொறுக்கிய அந்த யானை, அவரது காரையும் தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது.

வீட்டுக்குள் முடங்கினர்

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டு இருந்த பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தனர். சற்று தொலைவில் யானை அங்குமிங்கும் சுற்றியபடி அட்டகாசம் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பீதியில், வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்ட பட்டாசு வெடித்தனர். ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் சுற்றித்திரிந்தது. அதிகாலையில் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தது. தொடர்ந்து பட்டாசு வெடித்து விரட்டியதால், நேற்று காலை 5.30 மணிக்கு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.


Next Story