அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு: 800 மாணவ- மாணவிகள் குவிந்தனர்


அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கைக்கான கலந்தாய்வு: 800 மாணவ- மாணவிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் சேர 800 மாணவ- மாணவிகள் குவிந்தனர்.

கரூர்,

கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 2-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து நேற்று பி.ஏ. தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்தது.

மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. தமிழ் பாடப்பிரிவில் 55 இடத்திற்கும், ஆங்கிலம் பாடப்பிரிவில் 58 இடத்திற்கும் கலந்தாய்வு நடந்தது. ஆனால் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக மாணவ- மாணவிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். 800 மாணவ- மாணவிகள் வரை குவிந்ததாக கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

சேர்க்கை ஆணை

கலந்தாய்வு காலை 10.15 மணி அளவில் தொடங்கி மதியம் 1.30 மணி அளவில் முடிவடைந்தது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 199 மதிப்பெண்களும், ஆங்கிலம் பாடத்தில் 196 மதிப்பெண்கள் எடுத்திருந்தவர்களும் முதலில் அழைக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து மதிப்பெண்கள் தர வரிசையில் கலந்தாய்வு நடந்தது. இதில் அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். மூத்த பேராசிரியர்கள் கந்தசாமி, பாண்டியம்மாள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் மாணவ- மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வழங்கினார்.

பாடப்பிரிவு

வருகிற 7-ந் தேதி பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், 9-ந் தேதி பி.காம், பி.காம் சி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.ஏ. வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Next Story