பிரிமியம் தட்கல் முறை அமல்படுத்தப்பட்டதால் பெரும் பாதிப்பு, முன் அறிவிப்பின்றி ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது ஏன்?


பிரிமியம் தட்கல் முறை அமல்படுத்தப்பட்டதால் பெரும் பாதிப்பு, முன் அறிவிப்பின்றி ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது ஏன்?
x
தினத்தந்தி 6 Jun 2017 3:30 AM IST (Updated: 6 Jun 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

தென்மாவட்ட அனைத்து ரெயில்களிலும் பிரிமியம் தட்கல் முறை அமல்படுத்தப்பட்டதால் பெரும் பாதிப்பு முன்அறிவிப்பின்றி ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது ஏன்?

விருதுநகர்,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்திலும் முன்அறிவிப்பின்றி ரெயில்வே நிர்வாகம் பிரிமியம் தட்கல் முறையை அமல்படுத்தியதால் தென்மாவட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு செல்வதற்கு சாலை வழி பயணத்தை விட ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புவது உண்டு. இதற்கு காரணம் பஸ் கட்டணத்தைவிட ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதும், ரெயில்களில் தூங்கும் வசதியுடன் பாதுகாப்பும் அதிகம் இருப்பதும் தான்.

தென் மாவட்டங்களுக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர், கன்னியாகுமரி, செந்தூர், பொதிகை, பாண்டியன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தென் மாவட்டம் வழியாக செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் முன்பதிவு கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதிலும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் குறைத்து விட்டதால் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்வதற்கு அதிக சிரமப்பட வேண்டி உள்ளது.

தட்கல்முறை

இந்த நிலையில் உடனடியாக முன்பதிவு செய்வதற்காக தட்கல் முறையை ரெயில்வே நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ரெயிலிலும் 30 சதவீத டிக்கெட்டுகள் தட்கல் முறையில் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த தட்கல்முறை டிக்கெட் பெறுவதற்கு ஆன்–லைன் முறையை பலர் கையாளுவதால் தட்கல் டிக்கெட்டையும் எளிதில் பெற்றுவிட முடியாது. ரெயில்வே நிர்வாகம் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென கடந்த மாதம் முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தவிர மற்ற அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 15 சதவீத டிக்கெட்டுகளை பிரீமியம் தட்கல் முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

பாதிப்பு

பிரீமியம் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒரு மணி நேரத்துக்குள் கட்டணம் உயர்ந்து கொண்டே போகும். விருதுநகரில் இருந்து சென்னை செல்வதற்கு வழக்கமாக ரூ.350 செலுத்த வேண்டி இருந்தால் பிரீமியம் தட்கல் முறையில் டிக்கெட் கட்டணம் ரூ.900 வரை கூட உயர்ந்துவிடும். இதனால் தென்மாவட்ட ரெயில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

கடந்த 2014–ல் தெற்கு ரெயில்வேயில் 7 ரெயில்களிலும், 2015–ல் 2 ரெயில்களிலும், 2016–ல் 4 ரெயில்களிலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 31 ரெயில்களிலும் பிரீமியம் தட்கல்முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ரெயில்வே அதிகாரி ஒருவர், தற்போது 100 ரெயில்கள் வரை இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடம் இருந்து இந்த நடைமுறைக்கான எதிர்ப்பை தவிர்ப்பதற்கே முன்அறிவிப்பின்றி தென்மாவட்ட ரெயில்களில் பிரீமியம் தட்கல் முறை அமல் படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரசில் இந்த முறை அமல்படுத்தப்படவில்லை. எனவே தென்மாவட்ட எம்.பி.க்கள் இது குறித்து ரெயில்வே அமைச்சகத்திடம் பேசி தென் மாவட்ட ரெயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பிரீமியம் தட்கல் முறையை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


Next Story