மாட்டு இறைச்சி விவகாரம்: தமிழக அரசின் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்
மாட்டு இறைச்சி விவகாரம்: தமிழக அரசின் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் வைகோ பேட்டி
மதுரை,
மதுரையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–
கண்மாய்களில் தூர் வாரி, விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்குவது நல்ல திட்டமாகும். அதே போல் சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. அப்போது நானே நேரில் ஆஜராகி வாதாடுவேன்.
தமிழகத்தில் கல்வித்துறை மட்டும் தான் சிறப்பாக செயல்படுகிறது. மற்ற துறைகளும் சிறப்பாக செயல்பட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் விவகாரம் அந்த கட்சியின் உள்கட்சி விஷயம். அதில் நான் தலையிட விரும்ப வில்லை. கூடங்குளத்தில் 5–வது, 6–வது மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். மத்திய அரசின் மாட்டு இறைச்சிக்கான தடை உத்தரவு, விவசாயிகளை பாதிக்கக் கூடியது.
எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு கேட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக உள்ளது. அதற்கு ஜனாதிபதி அனுமதி தரக்கூடாது என்று மத்திய அரசு அழுத்தம் தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.