அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த நடவடிக்கை சந்திராயன்–2 விண்கலம் சோதனைகள் தீவிரம்


அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த நடவடிக்கை சந்திராயன்–2 விண்கலம் சோதனைகள் தீவிரம்
x
தினத்தந்தி 7 Jun 2017 3:00 AM IST (Updated: 6 Jun 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

சந்திராயன்–2 விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தூத்துக்குடி,

சந்திராயன்–2 விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்தும வளாக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–

ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் தகவல் தொடர்புக்கான ஜி.சாட்–19 என்ற செயற்கை கோளுடன் நேற்று (நேற்று முன்தினம்) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ வரலாற்றில் இது சிறப்பு மிக்க ஒரு நாள். இது முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்து உள்ளது.

இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்பட கூடியது. இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இதற்கான என்ஜின், மகேந்திரகிரியில் வைத்து பல்வேறு கட்டங்களாக 199 முறை சோதனை செய்யப்பட்டது. இந்த செயற்கை கோள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. அந்த செயற்கைகோள் 3 நாட்களில் செயல்பட தொடங்கும். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய இந்த ராக்கெட்டில் சுமார் 4 டன் வரை எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணுக்கு எடுத்து செல்ல முடியும்.

தற்போது 4 டன் முதல் 6 டன் வரை எடையுள்ள செயற்கை கோள்களைசுமந்து செல்வதற்காக "செமி கிரையோஜெனிக்" தொழில் நுட்பத்தை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் "இஸ்ரோ சின்" என்னும் சுத்திகரிக்கப்பட்ட மண்எண்ணை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வு 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிவடையும்.

சந்திராயன்–2

இதே போன்று சந்திராயன்–2 விண்கலத்துக்கான சோதனைகள் மகேந்திரகிரி மையத்தில் நடந்து வருகிறது. தற்போது முதல்கட்ட சோதனை முடிவடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மார்க்–2 ராக்கெட் மூலம் சந்திராயன்–2 விண்ணில் செலுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story