ஜி.எஸ்.டி. வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் வைகோ பேட்டி
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உரிமையை பெற்றுத்தர வேண்டும் என வைகோ தெரிவித்தார்.
திருவேங்கடம்,
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உரிமையை பெற்றுத்தர வேண்டும் என வைகோ தெரிவித்தார்.
சொந்த ஊருக்கு வைகோ வருகைம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேச துரோக வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த மே மாதம் 25–ந் தேதி வைகோ ஜாமீனில் வெளிவந்தார். 52 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின்பு முதல் முறையாக நேற்று தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டிக்கு வருகை தந்தார். அங்கு அவரது வீட்டின் முன்பு கலிங்கப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதற்கு நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் வைகோ பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த மத்திய, மாநில தி.மு.க அரசையும் குற்றம் சாட்டி பேசியதற்காக என் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது. இந்த சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற வாய்ப்பூட்டு அடக்குமுறை சட்டம் ஏவப்பட்டது என்பதை இன்றைய இளைஞர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காக சிறை செல்ல முடிவெடுத்து சிறை சென்றேன். 52 நாட்கள் கழித்து கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று ஜாமீனில் வெளி வந்தேன்.
அழுத்தம் கொடுக்க வேண்டும்ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இந்திய நாடு பொலிவு பெறும் என பிரதமர் மோடி கூறியிருப்பது, அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் இரண்டு வர்த்தக சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு இதுசம்பந்தமாக அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கு உரிய உரிமையை பெற்றுத்தர வேண்டும். விவசாயிகளுக்கு இன்னும் பயிர் பாதுகாப்பு திட்ட நிதி உதவி வழங்கப்படவில்லை. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
நிகழ்ச்சியில் ம.தி.மு.க. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட அவை தலைவர் உவரி ரைமண்ட், ஜோதிராஜ், குருவிகுளம் வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ராஜாராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.