சத்தியமங்கலம், தாளவாடியில் இந்து முன்னணியினர் சாலை மறியல்
சத்தியமங்கலம், தாளவாடியில் இந்து முன்னணியினர் சாலை மறியல்; 37 பேர் கைது
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம், தாளவாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று இந்து முன்னணி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதை கண்டித்து சத்தியமங்கலம் புதுபாலம் அருகே உள்ள ரோட்டில் இந்து முன்னணியினர் ஈரோடு மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் நேற்று மாலை 6.15 மணி அளவில் ஒன்று திரண்டனர். பின்னர் திடீரென சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டதாக 9 பேரை கைது செய்தனர்.
தாளவாடிஇதேபோல் தாளவாடி ஒன்றிய இந்து முன்னணியினர் மேற்கு மாவட்ட பொது செயலாளர் சிவசக்திவேல் தலைமையில் தாளவாடி பஸ் நிலையம் அருகே உள்ள தொட்டகாஜனூர் ரோட்டில் நேற்று மாலை 6 மணி அளவில் ஒன்று கூடினார்கள்.
அப்போது கெட்டவாடியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மறித்து சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் தொட்டகாஜனூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டதாக 28 பேரை கைது செய்தனர்.
தாளவாடி, சத்தியமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 37 பேரும் அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவு 7 மணி அளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.