ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி உள்பட 2 பேர் கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2017 4:30 AM IST (Updated: 7 Jun 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாப்புசாமி, காண்டிராக்டர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை திருச்செங்கோடு நகராட்சி பெரிய தெப்பக்குளம் புனரமைக்கும் பணியை ரூ.57¾ லட்சம் மதிப்பீட்டில் மேற்கொண்டார்.

இந்த பணிக்கு ரூ.50 லட்சத்தை நகராட்சியிடம் இருந்து ஏற்கனவே அவர் பெற்று விட்டார். இந்த நிலையில் மீதமுள்ள ரூ.7¾ லட்சத்தை பெறுவதற்காக, நகராட்சி உதவி செயற்பொறியாளரான சித்தாளந்தூரை சேர்ந்த பிரகாஷ்(வயது 40) என்பவரை சந்தித்தார். அப்போது பாப்புசாமி ரூ.1½ லட்சம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக மீதமுள்ள ரூ.7¾ லட்சத்தை கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பிரகாஷ் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாப்புசாமி முதற்கட்ட தவணையாக ரூ.50 ஆயிரத்தை பிரகாசிடம் கொடுத்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் மேலும் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுப்பதா என்று கருதிய பாப்புசாமி, இது தொடர்பாக நாமக்கல் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீசார் பாப்புசாமியிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று மாலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பாப்புசாமி ரசாயன பவுடர் தடவிய ரூ.50ஆயிரத்தை எடுத்து சென்றார். அங்கு அவர் உதவி செயற்பொறியாளர் பிரகாசிடம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார்.

ஆனால் பிரகாஷ், நகராட்சி அலுவலகத்தில் இருந்த மற்றொரு காண்டிராக்டரான திருச்செங்கோடு வேலூர் சாலையில் வசிக்கும் அண்ணாதுரையிடம் அந்த பணத்தை கொடுக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து அந்த பணத்தை பாப்புசாமி அண்ணாதுரையிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் அம்பலத்தரசன் மற்றும் போலீசார் அண்ணாதுரையை லஞ்சப்பணத்துடன் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில், ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரகாசையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், கைது செய்த இருவரையும் நாமக்கல்லில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.

திருச்செங்கோட்டில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story