கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு


கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Jun 2017 3:45 AM IST (Updated: 7 Jun 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்ரெட்டி நேற்று கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு

கடலூர் முதுநகர்,

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்ரெட்டி, நேற்று காலை தனி ரெயில் மூலம் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் கடலூர் செயலாளர் சுந்தரராஜன் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டது. தொடர்ந்து அவர் ரெயில் தண்டவாளங்களில் உள்ள பாயிண்டுகள் மற்றும் சிக்னல்கள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளத்தில் இருந்த ஒரு சில பாயிண்டுகள், அவரது மேற்பார்வையில் சீரமைக்கப்பட்டது. பின்னர் பயணிகள் ஓய்வறையில் உள்ள வசதிகள் மற்றும் பிளாட்பாரத்தில் பயணிகள் வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் பிரசன்னா, அருண் தாமஸ், ராஜராஜன், கடலூர் முதுநகர் ரெயில் நிலைய மேலாளர் ஸ்ரீனிவாச கோபாலன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கூறியதாவது:–

கேள்வி: கடலூர் முதுநகரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்கப்படுமா?

பதில்: கடலூர் முதுநகரில் இருந்து திருச்சி வரையில் இயக்கப்படும் பயணிகள் ரெயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கேள்வி: திருச்சி பயணிகள் ரெயில் 3–வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படுவதால் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். முதல் பிளாட்பாரத்திற்கு மாற்றப்படுமா?

பதில்: திருப்பாதிரிப்புலியூரில் இருந்து திருச்சிக்கு பயணிகள் ரெயில் இயக்கும்போது இந்த பிரச்சினை தீர்க்கப்படும்.

கேள்வி: திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு காணப்படுமா?

பதில்: ரெயில் நிர்வாகத்துக்கு மாநில அரசு 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே தருகிறார்கள். மாநில அரசு கூடுதல் தண்ணீரை வழங்கினால் தண்ணீர் பற்றாக்குறை குறையும் என்றார். மேலும் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் பயணிகளின் பாதுகாப்பு என்றார்.

பின்னர் அவர் சிறப்பு ரெயிலில் ஏறி சிதம்பரத்துக்கு சென்றார்.


Next Story