இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை
மணவாளக்குறிச்சியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
மணவாளக்குறிச்சி,
மணவாளக்குறிச்சி திட்டவிளைச் சேர்ந்தவர் சுரேஷ், கொத்தனார். இவருக்கும் வெள்ளமடம் காந்தி நகரைச் சேர்ந்த முத்துலெட்சுமி (வயது 25) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதுதொடர்பாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த முத்துலெட்சுமி வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் முத்துலெட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணைஇதுகுறித்து முத்துலெட்சுமியின் தாயார் சரஸ்வதி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், புதிதாக வீடு கட்ட எனது மகளிடம் பணம் வாங்கி வரும்படி சுரேஷ் கூறியதாகவும், இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்திலேயே மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இதுதொடர்பாக பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.