உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு அச்சப்படுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு


உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு அச்சப்படுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Jun 2017 4:15 AM IST (Updated: 7 Jun 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு அச்சப்படுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

 

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. அடிக்கடி தேர்தல் வருவது மாநிலத்துக்கு நல்லது அல்ல. தமிழக அமைச்சர்கள் திறமையாக செயல்பட்டு ஊழலற்ற, தூய்மையான ஆட்சி நடத்த வேண்டும்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுத்தேர்தல் வர வேண்டும் என சொல்லியிருப்பது அவருக்கு நல்லதாக இருக்கும். மக்களுக்கு நல்லதாக இருக்காது.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும். அதற்கு மாநில அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

கவிழ்ந்து விடும்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசு அச்சப்படுகிறது என நினைக்கிறேன். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தானாகவே இந்த அரசு கவிழ்ந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்று அவர்கள் எண்ணுவதாக தெரிகிறது.

பா.ஜனதா கட்சியில் தனிமனித புகழ் பாடப்படுவதாக சோனியாகாந்தி சொல்லியிருக்கிறார். இந்திராகாந்தி காலம் முதல் இன்றைய ராகுல்காந்தி காலம் வரை காங்கிரஸ் கட்சியில் தான் தனி மனித புகழ்ச்சி இருக்கிறது. பா.ஜனதாவில் இல்லை.

சிதம்பரம் உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்திருக்கிறது. தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றுத்தான் ஆக வேண்டும்.

ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்

கோடநாடு கொலைகள் பற்றி முறையாக விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். மேட்டூர் அணையை தூர்வாருவது விளம்பரத்துக்காக என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் துணை முதல்–அமைச்சராக இருந்து செய்த பணிகளும் விளம்பரத்துக்காகத்தான் செய்தாரா? தற்போது குளங்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் செய்தது எதற்காக? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். மேட்டூர் அணையை தூர்வாருவது காலம் தாழ்ந்தது. இருப்பினும் அதை வரவேற்கிறேன்.

தமிழக முதல்–அமைச்சர் சொன்னதுபோல் அனைத்து அணைகளையும், குளங்களையும் தூர்வார வேண்டும். 2021–ம் ஆண்டிலும் அ.தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியிருப்பது அவரது நம்பிக்கையை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story