விபத்தில் சிக்கிய நகை வியாபாரியிடம் நகை, பணம் பறிப்பு
காரைக்குடி அருகே விபத்தில் சிக்கிய நகை வியாபாரியிடம் 41 பவுன் நகை, பணம் பறிப்பு உதவுவது போல் நடித்து மர்ம கும்பல் துணிகரம்
காரைக்குடி,
காரைக்குடி அருகே விபத்தில் சிக்கிய நகை வியாபாரிக்கு உதவுவது போன்று நடித்து, அவரிடம் இருந்த 41 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை மர்ம கும்பல் பறித்துச் சென்றது.
தங்க நகை வியாபாரிகாரைக்குடி முத்தூரணி பகுதியில் வசித்து வருபவர் ஹரிபிரசாத்(வயது 35). இவர் ஆவிச்சி செட்டியார் வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். பல்வேறு ஊர்களில் உள்ள நகைக்கடைகளுக்கு ஆர்டரின் பேரில் தங்கநகைகள் செய்து கொடுத்து வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஹரிபிரசாத் நகை வியாபாரத்திற்காக தனது நண்பர் குருபிரசாத் என்பவருடன் காரில் புதுக்கோட்டை மாவட்டம் அறத்தாங்கிக்கு சென்றார். அங்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டு 2 பேரும் காரைக்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை குருபிரசாத் ஓட்டி வந்தார்.
விபத்துசாக்கோட்டை அருகே அறத்தாங்கி மெயின் ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த குருபிரசாத் காயமடைந்து மயங்கினார். ஹரிபிரசாத்திற்கும் காயம் ஏற்பட்டது. அப்போது பின்னால் காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், விபத்தில் சிக்கிய குருபிரசாத் மற்றும் ஹரிபிரசாத்திற்கு உதவுவதாக கூறியது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கிய 2 பேரையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு கண்டனூர் நோக்கி சென்றனர்.
41 பவுன் நகைகள்ஆனால் கண்டனூர் வந்த பிறகும் அந்த கும்பல் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் ஊரை தாண்டி வேறு பாதையில் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த ஹரிபிரசாத் கார் சென்று கொண்டிருந்தபோதே காரின் கதவை திறந்து தான் வைத்திருந்த நகைப்பையோடு குதித்துவிட்டார். உடனே அந்த கும்பல் காரை நிறுத்தி ஹரிபிரசாத்தை உருட்டு கட்டையால் தாக்கினர்.
இதன்பின்னர் ஹரிபிரசாத் வைத்திருந்த நகைப்பையை பறித்துக் கொண்டதுடன், காரில் மயங்கிய நிலையில் கிடந்த குருபிரசாத்தை கடத்திக் கொண்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது. பறிபோன நகைப்பையில் 41 பவுன் நகைகள் மற்றும் அறத்தாங்கியில் நகை விற்ற பணம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் இருந்தன. இதுகுறித்து ஹரிபிரசாத் சாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றார்.
காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனும் இதுதொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகிறார்.