வருகிற 28–ந் தேதி முதல் சூப்பர் பாஸ்டாக மாறும் கோவை – நாகர்கோவில் ரெயில் புறப்படும் நேரத்தை மாற்றக்கூடாது


வருகிற 28–ந் தேதி முதல் சூப்பர் பாஸ்டாக மாறும் கோவை – நாகர்கோவில் ரெயில் புறப்படும் நேரத்தை மாற்றக்கூடாது
x
தினத்தந்தி 8 Jun 2017 3:45 AM IST (Updated: 8 Jun 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 28–ந் தேதி முதல் சூப்பர் பாஸ்டாக மாறும் கோவை – நாகர்கோவில் ரெயில் புறப்படும் நேரத்தை மாற்றக்கூடாது பயணிகள் கோரிக்கை

கோவை,

கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரெயில் புறப்படும் நேரத்தை மாற்றக்கூடாது என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூப்பர் பாஸ்ட் ரெயிலாக மாற்றம்

தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கோவையில் வசித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்படுகிறது. அந்த ரெயில் கோவையில் இருந்து தினமும் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.30 மணியளவில் நாகர்கோவில் சென்றடைகிறது. இதேபோல் நாகர்கோவிலில் இருந்து மறு மார்க்கத்தில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கோவையை காலை 7 மணிக்கு வந்தடைகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக (சூப்பர் பாஸ்ட் ரெயில்) வருகிற 28–ந் தேதி முதல் மாற்றப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரெயிலில் கட்டணம் சிறிது உயர்த்தப்பட்டு உள்ளது. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல 2–ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் தற்போது கட்டணம் ரூ.310 வசூலிக்கப்படுகிறது. இனி 30 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.340 வசூலிக்கப்படும்.இதே போல் மூன்று அடுக்கு குளிர் சாதன பெட்டிக்கான கட்டணம் ரூ.840 இனி ரூ.45 உயர்த்தப்பட்டு ரூ.885 ஆக நிர்ணயிக்கப்படும். முன்பதிவு இல்லாத பெட்டிக்கான கட்டணம் ரூ.160–ல் இருந்து ரூ.175 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு வருகிற 28–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நேரம் மாற்றத்துக்கு காரணம் என்ன?

இதற்கிடையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றப்பட்டபோதிலும் அது கோவையில் இருந்து புறப்படும் நேரம் இரவு 8.30 மணிக்கு பதிலாக 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து இந்த ரெயிலை அடிக்கடி பயன்படுத்தும் பயணிகள் சிலர் கூறியதாவது:–

கோவையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையை முடித்து விட்டு ஊருக்கு புறப்படுவதற்கு இரவு 8,.30 மணி என்பது வசதியாக இருந்தது. இதனால் அந்த ரெயிலை கோவை மக்கள் அதிகம் விரும்பினார்கள். ஆனால் தற்போது அது புறப்படும் நேரம் இரவு 7.30 மணியாக மாற்றப்பட்டுள்ளதால் 90 சதவீத பயணிகள் அந்த ரெயிலில் செல்ல முடியாது. இதனால் அந்த ரெயிலை பயணிகள் கைவிட வேண்டியிருக்கும். ரெயிலின் நேரத்தை மாற்றுவதால் ரெயில்வேக்கு லாபம் எதுவும் கிடையாது. பொதுவாக ஏற்கனவே உள்ள நேரத்தை விட 5 அல்லது 10 நிமிடங்கள் தான் மாற்றப்படும். ஆனால் ஒரு மணி நேரம் மாற்றியிருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை புறக்கணிக்கப்படுகிறது

இதுகுறித்து கோவை ரெயில்வே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:–

கோவையிலிருந்து புறப்பட்டு செல்லும் ஒரு சில ரெயில்களை போன்று கோவை–நாகர்கோவில் ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்தாலும் அதில் இடம் கிடைக்காது. கோவையிலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை போன்று கோவை–நாகர்கோவில் ரெயிலிலும் 100 சதவீதம் பயணிகளின் கூட்டம் இருக்கும். வருமானம் அதிகம் தரும் அந்த ரெயிலின் நேரத்தை மாற்றியிருப்பது கோவையை தென்னக ரெயில்வே வேண்டுமென்றே புறக்கணிக்கிறது என்று தெரிகிறது. பயணிகளுக்கு வசதியை செய்து தருவதற்கு பதிலாக பயணிகளை ரெயிலில் செல்ல விடாமல் செய்வதில் தான் ரெயில்வே நிர்வாகம் தீவிரமாக உள்ளது. வருகிற 28–ந் தேதிக்கு பிறகு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டில் தற்போது கோவையிலிருந்து இரவு 7.30 மணிக்கு ரெயில் புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே எக்ஸ்பிரஸ் ரெயிலாக இருந்தது தற்போது அதிவிரைவு ரெயிலாக மாற்றப்பட்டுள்ளதால் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேகம் அதிகரிக்கும் போது அந்த ரெயில் போய் சேரும் நேரம் குறையும். அப்படியென்றால் அந்த ரெயில் கோவையில் இருந்து இரவு 8.30 மணிக்கு பதில் அதற்கு பிறகும் புறப்படலாம். ஆனால் ரெயில்வே நிர்வாகம் முரண்பாடாக கோவையில் இருந்து புறப்படும் நேரத்தை இரவு 8.30 மணிக்கு பதிலாக 7.30 மணிக்கு மாற்றியிருப்பது பயணிகளை சிரமம் அடைய செய்யும்.

நேரத்தை மாற்றாவிட்டால் போராட்டம்

மேலும் அந்த ரெயிலில் பயணம் செய்யும் 80 சதவீத பயணிகள் நெல்லையிலேயே இறங்கி விடுவார்கள். புதிய நேரப்படி அந்த ரெயில் நெல்லைக்கு அதிகாலை 3.30 மணியளவில் சென்றடையும். அந்த நேரத்தில் ரெயில் நிலையத்தில் இறங்கி கிராமங்களுக்கு செல்பவர்களுக்கு பஸ்கள் கிடைக்காது. இதனால் குடும்பத்தோடு செல்பவர்கள் நெல்லை ரெயில் நிலையத்தில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால் மறுமுனையில் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்படும் நேரம் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது நாகர்கோவிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே கோவையிலிருந்து புறப்படும் நேரத்தை முன்பு போல இரவு 8.30 மணிக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story