பிச்சாவரம் பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றக்கோரி சிதம்பரத்தில் 30 கிராம மக்கள் சாலை மறியல்
பிச்சாவரம் பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றக்கோரி சிதம்பரத்தில் 30 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டக்காரர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர்
சிதம்பரம்,
பிச்சாவரம் பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றக்கோரி சிதம்பரத்தில் 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இறால் பண்ணைகள்சிதம்பரம் அருகே பிச்சாவரம் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில அரசின் அனுதி பெற்றும், பல உரிய அனுமதியின்றியும் செயல்படுகின்றன. இந்த பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர்.
இங்கிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் அழியும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டு அப்பகுதியை சுற்றியுள்ள தா.சோ.பேட்டை, வடக்குபிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், திருவாசலடி, ராதாவிளாகம், உத்தமசோழமங்களம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடுமற்றொரு புறம் மாங்குரோவ் காடுகளின் முகத்துவாரங்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்யும் இறால், நண்டுகள், பலவகை மீன் இனங்கள் போன்றவை இந்த பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளால் அழிந்து வருகின்றன என்று பல்வேறு கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் இந்த இறால் பண்ணைகளை தடை செய்யக்கோரியும், பாதுகாக்கப்பட்ட பிச்சாவரம் வனப்பகுதியிலிருந்து இறால் பண்ணைகளுக்கு தேவையான தண்ணீர் எடுக்க, சட்ட விரோதமாக அனுமதித்த வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும், கடலை நம்பி உள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்று கோரி மாவட்ட கலெக்டர், வனத்துறை அலுவலர்களுக்கு பல்வேறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிச்சாவரத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களிடம் கையெழுத்து பெற்று, அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்இந்நிலையில் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சிதம்பரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 11 மணியளவில், கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் அமைப்பாளர் ரமேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் தலைமையில் பிச்சாவரத்தை சுற்றிலும் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டனர்.
சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து, சிதம்பரம் பஸ்நிலையம் முன்பு கடலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வரும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பேச்சவார்த்தைஇதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி, கண்காணிப்பாளர் மாறன், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள், இறால் பண்ணையை உடனே அகற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறினர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மறியல் நடந்த சாலை, பிரதான சாலை என்பதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
185 பேர் கைதுஇதில், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று, கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. மேலும் போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷங்களை ஏழுப்பினர். இருப்பினும் போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 185 பேர் கைதானார்கள். இதனால் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.