கோவில்பட்டி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை
கோவில்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
ஆட்டோ டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் 3–வது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியநாதன். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ராஜா (வயது 26). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி முத்துமாரி (23). இவர்களுக்கு மாரி செல்வம் (3), ராஜாசிங் (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராஜா தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் ராஜா வழக்கம்போல் ஜோதிநகர் ஆட்டோ ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இரவு 11 மணி அளவில் ராஜாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளில் தனியாக புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் ஆட்டோ ஸ்டாண்டுக்கு திரும்பி வரவில்லை.
காட்டு பகுதியில் பிணமாக...
இந்த நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள கசவன்குன்று கிராமத்துக்கு முன்பாக உள்ள காட்டு பகுதியில் ராஜா தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் அங்கு தனியாக நின்றது. ராஜா பனியன், பேண்ட் அணிந்து இருந்தார். அவரது சட்டையை காணவில்லை.
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜாவை கொலை செய்தது யார்? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டனரா? ராஜா எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ டிரைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.