வியாபாரி வீட்டில் ஜன்னலை உடைத்து 42 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வியாபாரி வீட்டில் ஜன்னலை உடைத்து 42 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-09T00:37:23+05:30)

பட்டுக்கோட்டையில் வியாபாரி வீட்டில் ஜன்னலை உடைத்து 42 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதி மதுக்கூர் சாலையில் வசித்து வருபவர் சந்திரமோகன் (வயது 48). மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சந்திரமோகன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டிக்குள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இதில் இருந்த 42 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சந்திரமோகன் வீடு பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து உள்ளே இருந்த பீரோக்களை உடைத்து 42 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை. மேலும், தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து சந்திரமோகன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story