ஆதரவாளர்கள் கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத எச்.விஸ்வநாத் ஒரு வாரத்திற்குள் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவிப்பு


ஆதரவாளர்கள் கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத எச்.விஸ்வநாத் ஒரு வாரத்திற்குள் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 2:00 AM IST (Updated: 10 Jun 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மாவட்ட முன்னாள் எம்.பி.யும், மந்திரியுமான எச்.விஸ்வநாத் தன்னை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், முதல்–மந்திரி சித்தராமையா ஆகியோர் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மைசூரு,

மைசூரு மாவட்ட முன்னாள் எம்.பி.யும், மந்திரியுமான எச்.விஸ்வநாத் தன்னை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், முதல்–மந்திரி சித்தராமையா ஆகியோர் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் பற்றியும் கடும் விமர்சனம் செய்து வந்தார்.

இதனால் அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிடுவார் என கூறப்படுகிறது. இதுபற்றி அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கே.ஆர்.நகரில் தனது ஆதரவாளர்களுடன் எச்.விஸ்வநாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகு பற்றி ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், நான் 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்துள்ளேன். தொடக்கத்தில் இருந்தே நான் காங்கிரஸ் கட்சியை கட்டிக்காத்து வந்தேன். சித்தராமையாவை நான் தான் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்து வந்தேன். இப்போது சித்தராமையாவே எனது அரசியல் வாழ்க்கையை அபகரித்துக்கொண்டார்.

எனது தாய் போல் நேசித்து வந்த காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவது மனவேதனையாக உள்ளது. இருப்பினும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவேன். நான் காங்கிரசில் இருந்து விலகிய பின்னர், எந்த கட்சியில் சேருவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. எனது கடைசி காலத்தில் கவுரவத்திற்காகவே வேறொரு கட்சியில் சேர முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார். தனது பேச்சின் போது எச்.விஸ்வநாத் கண்ணீர் விட்டு அழுதார். அவரை அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் கூறி தேற்றினர்.


Next Story