கோலார் தங்கவயலில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7¾ லட்சம் தங்க நகைகள்–வெள்ளி பொருட்கள் திருட்டு


கோலார் தங்கவயலில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7¾ லட்சம் தங்க நகைகள்–வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 10 Jun 2017 2:00 AM IST (Updated: 10 Jun 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7¾ லட்சம் தங்க நகைகள்– வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7¾ லட்சம் தங்க நகைகள்– வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருவண்ணாமலைக்கு சென்றனர்

கோலார் தங்கவயல் உரிகம்பேட்டை மஞ்சுநாத் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தமிழ்நாடு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து மோகன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

ரூ.7¾ லட்சம் நகைகள் திருட்டு

மேலும் வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.7¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை போலீசில் மோகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்மநபர்களின், ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story