அம்பர்நாத்தில், போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி; 8 பேர் கைது
அம்பர்நாத்தில் போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பர்நாத்,
அம்பர்நாத்தில் போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி கால்சென்டர்தானே மிராரோட்டில் போலி கால்சென்டர் நடத்தி, அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு பேசி பலகோடி ரூபாய் மோசடி நடந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கால்சென்டர் நிர்வாகிகள், ஊழியர்கள் என மொத்தம் 70–க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், அம்பர்நாத் கிழக்கில் உள்ள ஒரு கட்டிடத்தில் போலி கால்சென்டர் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் அமெரிக்கர்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு, தனியார் வங்கியில் கடன் வாங்க உதவுவதாக கூறி, சேவை கட்டணமாக 100 முதல் 500 டாலர் வரை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தானே குற்றப்பிரிவு துனை கமிஷனர் முகுந்த் ஹாதோடேவுக்கு தகவல் கிடைத்தது.
8 பேர் கைதுஇந்த தகவலை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் போலீசார் அந்த கால்சென்டரில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அது போலி கால்சென்டர் என்பதும், அமெரிக்கர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த போலி கால்சென்டரை சேர்ந்த தேவேஷ் யேர்லேகர், சச்சின் ஆனந்த், குருபிரசாத், பிரமோத் தின்கர், வசீம் சேக், மோகன் குல்கர்ணி, சரண் பிரவிண், ரோஹன் புருஷோத்தம் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2015–ம் ஆண்டு முதல் பல கோடி ரூபாய் மோசடியை அரங்கேற்றி வந்தது தெரியவந்தது.
பொருட்கள் பறிமுதல்போலீசார் அங்கிருந்த 31 கணினிகளின் ஹார்டு டிஸ்க், 3 மடிக்கணினிகள் மற்றும் பல ஆவணங்களை கைப்பற்றினார்கள். மேலும் 18 பேரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
கைதான 8 பேர் மீதும் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.