திண்டுக்கல்லில் மர்மமான முறையில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை
திண்டுக்கல்லில், தண்டவாளத்தில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அனுமந்தநகர்– பாலகிருஷ்ணாபுரம் இடையே கரூருக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்று காலை ரத்த காயங்களுடன் ஒரு ஆண் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் தாலுகா மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, இறந்த நபருக்கு 30 வயது இருக்கும். அவர் அரைக்கால் பேண்ட் மட்டும் அணிந்து இருந்தார்.
மர்மச்சாவுஇறந்தவரிடம் செல்போன், அடையாள அட்டை எதுவும் இல்லை. எனவே அந்த பகுதியை சேர்ந்தவர் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என விசாரித்தோம். ஆனால் அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவரின் தலையில் பலத்த காயம் உள்ளது.
மேலும் உடலிலும் சிராய்ப்பு காயங்கள் உள்ளன. எனவே அவர் ரெயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது வெட்டி கொலை செய்து கொண்டுவந்து தண்டவாளத்தில் வீசிச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
தண்டவாளத்தில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.