பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்டம் நிறைவேறினால் ஊட்டி நகராட்சிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்


பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்டம் நிறைவேறினால் ஊட்டி நகராட்சிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:15 AM IST (Updated: 10 Jun 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்டம் நிறைவேறினால் ஊட்டி நகராட்சிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் நகராட்சி கமி‌ஷனர் தகவல்

ஊட்டி,

பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்டம் நிறைவேறினால், ஊட்டி நகராட்சிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

ஊட்டி நகராட்சி

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர கோடைக்காலம், குளிர்காலம், விஜயதசமி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். மேலும் ஊட்டியில் நூற்றுக்கணக்கான காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. இதையடுத்து குளு, குளு நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு அணைகள் கட்டப்பட்டு உள்ளன.

அதில் டைகர்ஹில் அணை, மார்லிமந்து அணை, மேல் தொட்டபெட்டா, கோரிசோலா, கீழ் கோடப்பமந்து, உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள தண்ணீர் மூலம் ஊட்டி நகராட்சியின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அணைகளில் இருந்து குடிநீர் ஊட்டிக்கு வழங்கப்பட்டாலும், மழை காலங்களை தவிர மற்ற நேரங்களில் அணைகளில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி ஆகும்.

பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்டம்

எனவே, ஊட்டி அருகே உள்ள பார்சன்வேலி அணையில் இருந்து ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து வழங்கப்படும் குடிநீர் குன்னூர் வெலிங்கடன் ராணுவ முகாமிற்கு வழங்கப்படுவதால், ஊட்டியில் சீசன் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை போக்க பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்டம் அமைக்கும் பணி ரூ.27 கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தொடங்கப்பட்டது. பார்சன்வேலி அணையில் இருந்து வனப்பகுதி வழியாக ஊட்டிக்கு குடிநீர் கொண்டுவரும் பணிக்கு வனத்துறையினரின் அனுமதி பெற கடந்த 2 ஆண்டுகள் பணிகள் தொடராமல் இருந்தது.

பின்னர் வனத்துறையினர் அனுமதி பெற்று குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பார்சன்வேலி அணையில் இருந்து காந்தல், டென்மிர், ஆர்.கே.புரம் ஆகிய குடிநீர் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் காந்தல் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக சேரிங்கிராஸ், கோடப்பமந்து பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி கிடைக்காததால், அந்த பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

தடையின்றி குடிநீர் வினியோகம்

இருந்தாலும், ஊட்டி கோடப்பமந்து பகுதியில் வனத்துறையினரின் அனுமதி பெற்று, குடிநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் தொட்டியில் 10 ஆயிரம் லிட்டர் குடிநீரை தேக்கி வைக்க முடியும். பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்தால், தினமும் ஊட்டிக்கு 6 லட்சம் லிட்டர் குடிநீர் தடையின்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும். ஆனால் தற்போது முதற்கட்டமாக டென்மிர், ஆர்.கே.புரம், பழைய ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிகளில் இருந்து 3½லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) பிரபாகர் கூறும்போது, பார்சன்வேலி 3–வது குடிநீர் திட்ட பணிகள் ஜூலை மாத இறுதியில் முடிக்கப்பட்டு, நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் ஊட்டி நகராட்சி பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தடையின்றி வினியோகம் செய்யப்படும் என்றார்.


Next Story