தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தியதால் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்


தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தியதால் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:45 AM IST (Updated: 10 Jun 2017 4:17 AM IST)
t-max-icont-min-icon

தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தியதால் அண்ணனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண், தற்கொலை என்று நாடகமாடியது அம்பலம்

கோவை,

தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமைப் படுத்தி யதால் ஆத்திரமடைந்த மனைவி கணவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்றதால் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த அண்ணனும் கைதானார். கோவையில் நடைபெற்ற இந்த கொலை குறித்து போலீசார் கூறியதாவது:–

குடிபோதையில் தகராறு

கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் மருதாசல தேவர் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது43). தேங்காய் வியாபாரி. இவருடைய மனைவி பரிமளாதேவி(40). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. வசந்தகுமார்(17) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதையடுத்து பரிமளாதேவி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகனுடன் சென்றுவிட்டார். கணவர் ஈஸ்வரன் அங்கேயும் சென்று மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 2 மாதங்களாக அந்த வீட்டுக்கு செல்லாமல் இருந்த ஈஸ்வரன், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் குடிபோதையில் பரிமளாதேவியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன் கதவை உடைத்து உள்ளே சென்று மனைவியுடன் தகராறு செய்தார்.

கழுத்தை இறுக்கி கொலை

மேலும் மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது. பின்னர் ஈஸ்வரன் அந்த வீட்டில் படுத்து தூங்கினார். கணவரின் துன்புறுத்தல் பெற்றோர் வீட்டிலும் நீடிக்கிறதே என்று பரிமளாதேவி வெறுப்படைந்தார். பரிமளாதேவி அண்ணன் திருநாவுக்கரசுவிடம் இதனை கூறி கதறி

அழுதார். பின்னர் இருவரும், ஈஸ்வரனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி நள்ளிரவில் வீட்டில் கிடந்த கயிற்றால் தூங்கிக்கொண்டு இருந்த கணவரின் கழுத்தை பரிமளாதேவி இறுக்கினார். அவரது அண்ணன் திருநாவுக்கரசு ஈஸ்வரனின் கால்களை பிடித்துக்கொண்டார். இதில் ஈஸ்வரன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தற்கொலை நாடகம்

கணவரை கொலை செய்ததை மறைக்க திட்டமிட்ட பரிமளாதேவி, கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல், கணவரின் கழுத்தில் கயிற்றை தொங்கவிட்டார். பின்னர் நெகமத்தில் உள்ள ஈஸ்வரனின் அண்ணன் மகாலிங்கத்துக்கு போன் செய்து, ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். தம்பியின் இறப்பினால் அதிர்ச்சி அடைந்த மகாலிங்கமும் கோவை வந்து ஈஸ்வரனின் உடலை பார்த்து கதறிதுடித்தார். அதன்பின்னர் சிங்காநல்லூர் போலீசுக்கு ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாக போன் மூலம் தெரிவித்தனர்.

சிங்காநல்லூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டபோது, ஈஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் இல்லை. மாறாக அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதை போலீசார் பார்த்து பரிமளாதேவியிடம் விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் ஆகியோர் விரைந்து சென்று, பரிமளாதேவியிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். முன்னுக்குப்பின் முரணாக பேசிய பரிமளாதேவி, இறுதியில் கணவர் தற்கொலை செய்யவில்லை என்றும், தன்னுடைய அண்ணன் திருநாவுக்கரசுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் பரிமளா தேவி, அவருடைய அண்ணன் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர்.

பரிமளாதேவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

தினமும் கொடுமை

என்னுடைய கணவரின் குடிப்பழக்கத்தினால் தினமும் நான் அவதியடைந்தேன். அவர் கடந்த 18 ஆண்டுகளாக தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். வீட்டு செலவுக்கும் பணம் தர மாட்டார். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்தே அழித்ததால், குடும்பத்தை எப்படி நடத்துவது? என்று கணவரிடம் கேட்கும்போதெல்லாம் என்னை அடித்து உதைத்தார். தினந்தோறும் அவருடைய கொடுமை அதிகரித்து கொண்டே சென்றது.

எனவேதான் ஆத்திரத்தில் அண்ணனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். போலீசில் இருந்து தப்பிப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story