மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து போராட்டம்


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு உடலை வாங்க மறுத்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:30 AM IST (Updated: 10 Jun 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே உள்ள தாதப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 46).

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள தாதப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 46). மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் தற்போது ஒப்பந்தப்பணியில் இல்லை. எனினும் அவ்வப்போது ஆர்.ஆர்.நகர் துணை மின்நிலையத்தில் அதிகாரிகளின் உத்தரவுப்படி பழுதுநீக்கும் பணியை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இவர் ஆர்.ஆர்.நகர் துணை மின் நிலையத்தில் மின் கம்பத்தில் ஏறி பணி செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். காந்திமதி தனது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் வலியுறுத்தி கணவரின் உடலை வாங்க மறுத்தார். மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் முருகேசன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் காந்திமதியுடனும், தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். நிவாரண தொகை கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க விண்ணப்பம் கொடுத்தால் அதனையும் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புவதாகவும் உறுதி அளித்தனர்.

அதன் பேரில் காந்திமதி மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்குப் பின் ஈஸ்வரனின் உடலை பெற்றுச் சென்றனர். காந்திமதியின் புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் ஆர்.ஆர்.நகர் மின்வாரிய உதவி என்ஜினீயர் சுலைமான் சேட், மின் ஆய்வாளர் சுப்புராஜ், மின் உதவியாளர் பால்பாண்டியன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சுப்புராஜ் மற்றும் பால் பாண்டியன் மீது மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இறந்த ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு உறுதி அளித்தபடி நிவாரணம் வழங்காத பட்சத்தில் தொழிற்சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story