பிளாஸ்டிக் அரிசி விற்கபடுகிறதா? ஆலை, கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கபடுகிறதா? ஆலை, கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கபடுகிறதா? என ஆலை மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிக் அரிசிஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசி, தற்போது தமிழகத்திலும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏதேனும் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கரலிங்கம், முருகன், ரவிக்குமார், கதிரவன், சந்திரசேகர், ஜெயராஜ், இப்ராகிம், ரமேஷ், சரவணன், பாரதிபன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி ஆலைகள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகள் என 122 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
நடவடிக்கைஇதில் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை. இருப்பினும் 7 ஆலைகளில் இருந்து அரிசியை மாதிரிகள் எடுத்து அதனை கோயம்புத்தூரில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கடைகளில் பிளாஸ்டிக் அரிசியை யாரும் விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறி விற்பனை செய்வது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.