காதல் திருமணம் செய்த பெண் ஆணவ கொலை: தலைமறைவாக உள்ள தந்தை–மகனை பிடிக்க போலீசார் தீவிரம்
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் திருமணம் செய்த பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள தந்தை–மகனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் திருமணம் செய்த பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள தந்தை–மகனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
வாயில் விஷத்தை ஊற்றி கொலைதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியில் உள்ள தனியார் தும்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மகள் வெண்ணிலா(17), அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுடலைமுத்துவின் குடும்பத்தினர் வெண்ணிலாவை ஆணவ கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி வெண்ணிலாவுக்கு 18 வயது பூர்த்தி ஆனதும் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரை சொந்த ஊரான கால்வாய் கிராமத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் வெண்ணிலாவின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்து பின்னர் அவரது உடலில் பெரிய கல்லை கட்டி பக்கத்து ஊரான வல்லகுளம் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் வீசிச் சென்றனர்.
சித்தப்பா உள்பட 2 பேர் கைதுபின்னர் சுடலைமுத்து தன்னுடைய மகளை காணவில்லை என்று செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 2 ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருந்த இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெண்ணிலாவை அவருடைய குடும்பத்தினரே ஆணவ கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் வல்லகுளம் கிணற்றில் இருந்து வெண்ணிலாவின் எலும்புக்கூடு, உடல் பாகங்களை போலீசார் மீட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வெண்ணிலாவின் சித்தப்பாவான கால்வாயை சேர்ந்த ஆறுமுகம்(33), உறவினரான பாலசுப்பிரமணியன் என்ற பண்டாரம்(25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தந்தை–மகனுக்கு வலைவீச்சுஇந்த வழக்கில் தொடர்புடைய சுடலைமுத்து, அவருடைய மகன் இசக்கிபாண்டி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சுந்தரேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் தலைமறைவாக உள்ள தந்தை–மகன் இருவரையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவருகிறார்கள்.