ஊட்டியில் நின்ற லாரி மீது தண்ணீர் லாரி மோதி 6 பேர் படுகாயம்


ஊட்டியில் நின்ற லாரி மீது தண்ணீர் லாரி மோதி 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:30 AM IST (Updated: 11 Jun 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் விபத்து: நின்ற லாரி மீது தண்ணீர் லாரி மோதியது: 6 பேர் படுகாயம்

ஊட்டி,

ஊட்டியில் நின்று கொண்டிருந்த லாரி மீது, தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தண்ணீர் லாரி

ஊட்டி–மஞ்சூர் சாலையில் உள்ள கைகாட்டி என்ற இடத்தில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு தண்ணீர் தேவைப்படுவதால், ஊட்டியில் உள்ள தனியார் கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டு, ஒரு தண்ணீர் லாரி ஊட்டியை நோக்கி நேற்று காலை 8 மணியளவில் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் லாரியை திருச்சி மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவர் ஓட்டினார். லாரியில் தொழிலாளர்கள் முரளி (29), பாண்டி (32), நாகரத்தினம் (42), கார்த்திகேயன் (37), செல்வராஜ் (42) ஆகியோர் ஓட்டுனரின் இருக்கை அருகே அமர்ந்திருந்தனர்.

தண்ணீர் லாரி அரசு தாவரவியல் பூங்கா சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது, திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு தண்ணீர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி மின்கம்பத்தில் மோதி நின்றது.

6 பேர் படுகாயம்

மற்றொரு தண்ணீர் லாரி சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் தொங்கிய நிலையில் நின்று கொண்டு இருந்தது. இந்த விபத்தில் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திக், முரளி, பாண்டி, நாகரத்தினம், கார்த்திகேயன், செல்வராஜ் ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர். மற்றொரு தண்ணீர் லாரியின் டிரைவர் சதீசுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் படுகாயம் அடைந்த 6 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் 6 பேரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story