குண்டும் குழியுமான சாலையால் கிராம மக்கள் அவதி
குண்டும்குழியுமான சாலையால் கிராம மக்கள் அவதி சீரமைக்க கலெக்டரிடம் மனு
பரமக்குடி,
குண்டும்குழியுமான சாலையால் மும்முடிச்சாத்தான் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த சாலையை உடனே சீரமைக்க கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
வாகனங்கள் வர மறுப்புபரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்டது மும்முடிச்சாத்தான் கிராமம். இங்கு சுமார் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராமநாதபுரம்–மேலூர் சாலையில் இருந்து 1¾ கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊருக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் கிராம பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் கீழே விழுந்து காயமடையும் நிலையும் உள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்சு, ஆட்டோ போன்ற வாகனங்கள் கூட இந்த ஊருக்கு வரமறுக்கின்றன.
மனு
எனவே மும்முடிச்சாத்தான் கிராமத்தில் இருந்து ராமநாதபுரம், நயினார்கோவில், பரமக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அ.தி.மு.க. கிளை செயலாளர் விஜயராஜ், கிராம பிரமுகர் அழகுசுந்தரம் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.