திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் தேர் நிலைக்கு வந்தது


திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் தேர் நிலைக்கு வந்தது
x
தினத்தந்தி 11 Jun 2017 4:00 AM IST (Updated: 11 Jun 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் தேர் நேற்று நிலைக்கு வந்து சேர்ந்தது.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, ஆசியாவின் 2-வது பெரிய தேர் என்ற பெருமைக்குரிய அர்த்தனாரீஸ்வரர் பெரிய தேரோட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் 2-வது நாள் தேரோட்ட முடிவில், தேர் வடக்கு ரதவீதி தொடக்கத்தில் நின்றது. இந்த நிலையில் நேற்று 3-வது நாள் தேரோட்டம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். வடக்கு ரதவீதியில் இருந்து கிழக்கு ரதவீதியில் உள்ள தேர் நிலைக்கு வடம்பிடித்து இழுத்து வரப்பட்டது.

வடக்கு ரதவீதியில் இருந்து கிழக்கு ரதவீதிக்கு திரும்பும் வளைவில் சாலை மேடாக இருந்ததால் பக்தர்கள் தேரை இழுக்க சிரமப்பட்டனர் தேர் நகரவில்லை. இதையடுத்து உடனடியாக விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டு அதில் வடத்தை கட்டி இழுத்தனர். அதன்பிறகு மேட்டை கடந்த அந்த தேரை பக்தர்கள் மீண்டும் வடம்பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பிற்பகல் 1 மணியளவில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.

ஆதிகேசவ பெருமாள் தேர்

இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் 4 ரதவீதிகள் வழியாக நடந்தது. பின்னர் மண்டப கட்டளைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை(திங்கட்கிழமை) அர்த்தனாரீஸ்வரர் பரிவார தெய்வங்களுடன் திருமலைக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. முன்னதாக பெரிய தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பாக விநாயகர், முருகர் தேரோட்டம் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story