மராட்டியத்தில் கனமழை மின்னல் தாக்கி தந்தை–மகன் உள்பட 6 பேர் பலி 10 பேர் படுகாயம்


மராட்டியத்தில் கனமழை மின்னல் தாக்கி தந்தை–மகன் உள்பட 6 பேர் பலி 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Jun 2017 3:51 AM IST (Updated: 11 Jun 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கனமழையின்போது மின்னல் தாக்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் கனமழையின்போது மின்னல் தாக்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

கனமழை

மராட்டியத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தின் பல இடங்களில் இடி, மின்னலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இருவேறு இடங்களில் கனமழையின்போது மின்னல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தானூர் என்னும் கிராமத்தில் நேற்று மழை பெய்துகொண்டிருந்தது. இதை பொருட்படுத்தாமல் கிராமத்தை சேர்ந்த 13 பேர் அங்குள்ள விவசாய நிலத்தில் பூஜை நடத்தினர். அப்போது திடீரென அவர்களை மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், 4 பேர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது.

உயிரிழந்தவர்கள் சந்தீப் குஸ்நாகே(வயது 30), ரிதேஷ் கினேகே(25), ஜான்கிராம் தோட்சம்(43), சியாம்ராவ் கனகே(58) என்பது தெரியவந்தது. இவர்களின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தந்தை, மகன்

நாசிக் மாட்டம் சோன்தி கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாத் மவல்(வயது 45). விவசாயி. இவரது மகன் மயூர்(17). இருவரும் நேற்று தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வேலை செய்துகொண்டு இருந்தனர். அப்போது அங்கு கனமழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கி தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோயினர். இந்த சம்பவத்தின் போது அவருடன் இருந்த உறவினர் ஒருவரும் காயம் அடைந்தார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story