மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலி புத்தகத்துக்கு அட்டை வாங்க தந்தையுடன் சென்ற போது பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலி புத்தகத்துக்கு அட்டை வாங்க தந்தையுடன் சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 12 Jun 2017 2:00 AM IST (Updated: 11 Jun 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

களக்காடு,

களக்காடு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். புத்தகத்துக்கு அட்டை வாங்குவதற்காக தந்தையுடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

3–ம் வகுப்பு மாணவன்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேல வடகரை கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் பாப்பா (வயது 41), விவசாயி. அவருடைய மனைவி மீனா குமாரி (35). இவர்களுக்கு குளசி, நந்தினி, பேச்சிமுத்து (9) ஆகிய குழந்தைகள் உள்ளனர். குளசி அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 8–ம் வகுப்பும், நந்தினி 6–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். பேச்சிமுத்து கீழப்பத்தையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 3–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று காலை பேச்சிமுத்து தனது புதிய நோட்டு, புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து பாப்பாவும் தனது மோட்டார்சைக்கிளில் மகனை ஏற்றிக் கொண்டு களக்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் மோதியது

மதியம் 12.30 மணி அளவில் சிங்கம்பத்து பகுதியை கடந்து குளத்தங்கரை அருகே சென்ற போது எதிரே வந்த கார், மோட்டார்சைக்கிளின் மீது மோதியது. இதில் பேச்சிமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். பாப்பா லேசான காயம் அடைந்தார். இதையடுத்து காரை ஓட்டி வந்தவர், பாப்பா, பேச்சிமுத்து ஆகிய இருவரையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு, சிகிச்சைக்காக களக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து வேறொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, பேச்சிமுத்து இறந்து விட்டது தெரியவந்தது. இச்சம்பவத்துக்கு இடையே காரை ஓட்டி வந்தவர் ஆஸ்பத்திரி வாசலில் இருவரையும் விட்டுவிட்டு நைசாக அங்கிருந்து நழுவிச் சென்று விட்டார்.

கார் டிரைவருக்கு வலைவீச்சு

தகவல் அறிந்த களக்காடு போலீசார், பேச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

புதிதாக வாங்கியிருந்த தனது நோட்டு புத்தகங்களுக்கு அட்டை வாங்குவதற்காக தந்தையுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது, விபத்தில் சிக்கி பேச்சிமுத்து இறந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story