ஈரோட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Jun 2017 11:00 PM GMT (Updated: 11 Jun 2017 6:47 PM GMT)

ஈரோட்டில் புதிய மேம்பால பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.

ஈரோடு,

ஈரோட்டில் நேற்று ரூ.736 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியில் ரூ.58½ கோடியில் கட்டப்பட உள்ள மேம்பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

நேற்று காலை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தார். நேராக எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், எம்.ஜி.ஆர். சிலை பாதத்தை தொட்டு வணங்கினார். பின்னர் அங்கு சுற்றிலும் நின்று கொண்டிருந்த பொது மக்களை பார்த்து 2 விரல்களை உயர்த்தி உற்சாகமாக கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் விழா அரங்குக்கு சென்று அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேம்பாலம் கல்வெட்டு

அதைத்தொடர்ந்து ரூ.58 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள மேம்பால கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து பணி தொடங்குவதற்கான பூமி பூஜை நடந்தது. கால்கோள் நடப்பட்டதும், அதில் பால் ஊற்றி பணியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.சி.கருப்பணன், ஈரோடு எம்.பி. எஸ்.செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் நேராக பெருந்துறை சென்ற அவர், அங்கு சம்பந்தியின் வீட்டுக்கு சென்று அவரது மருமகள் மற்றும் புதிதாக பிறந்த பேரக்குழந்தையை பார்த்து மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து மதியம் 1 மணி அளவில் புறப்பட்ட அவர் கார் மூலம் கோவை சென்று விமானத்தில் சென்னையை அடைந்தார்.


Related Tags :
Next Story