மலேசியாவுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: “கட்சி தலைவர்களின் கண்டனம் என்னை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது” வைகோ பேட்டி
மலேசியாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது என்னை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்று வைகோ கூறினார்.
தூத்துக்குடி,
மலேசியாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது என்னை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்று வைகோ கூறினார்.
பேட்டிதூத்துக்குடியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னையில் போயஸ் தோட்டத்துக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு மலேசியா செல்ல விசா கொடுத்த பிறகு, கருப்பு பட்டியலில் உங்கள் பெயர் உள்ளது, எங்கள் நாட்டுக்குள் நுழையக்கூடாது என்று கூறி தடுத்து விட்டனர்.
2014, 2015 ஆகிய 2 ஆண்டுகள் மலேசியாவுக்கு சென்று உள்ளேன். 2014–ல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், சிங்கள அரசு அனைத்துலக குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். கோலாலம்பூரிலே நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தும், அங்குள்ள நிலைமைகளை விளக்கினேன். பொதுவாக்கெடுப்பு என்ற கோரிக்கையை நான்தான் முதல் முதலாக வைத்தேன். இதனால் சிங்கள அரசு ஆத்திரம் அடைந்து உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் நான் செல்ல முடியாதபடி, என்னைப்பற்றி ஒரு கோப்பு தயாரித்து அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு இலங்கை அரசுதான் காரணமே தவிர, இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
நெகிழ்ச்சிதமிழ்நாட்டில் அனைத்து கட்சி தலைவர்களும் மலேசியா அரசு என்னை தடுத்து நிறுத்தியது கண்டனத்துக்கு உரியது, அநீதி இழைக்கப்பட்டு உள்ளது என்று கூறி இருப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய விடுதலைப்புலிகள் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இதிலே தங்கள் கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வருமா என்று எதையும் சரியாக யூகித்து சொல்ல முடியாத தெளிவற்ற நிலை உள்ளது. தேர்தல் வரும் என்று கூற முடியாது. ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்கு ஓட்டு இல்லை. ரஜினியுடன் சேர்ந்து தனி கூட்டணி உருவாக்குவது என்பது கற்பனையை காற்றிலே உலவ விடுகின்ற வதந்திகள்.
இவ்வாறு வைகோ கூறினார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.