மாணவர்கள் இடையே மோதலை தடுக்க பள்ளிகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்


மாணவர்கள் இடையே மோதலை தடுக்க பள்ளிகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 12 Jun 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் இடையே மோதலை தடுக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.

வண்டலூர்,

வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு எல்லைக்கு உட்பட்ட வண்டலூர், மண்ணிவாக்கம், கொளப்பாக்கம், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, நந்திவரம், காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமை தாங்கி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:–

ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்

பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவ–மாணவிகள் அணிந்து வரும் உடை மற்றும் புத்தக பைகள், தங்கும் விடுதிகள், பள்ளி பஸ்களில் செல்லும் போது கட்சி பாடல்கள், கட்சி கொடியோ அல்லது சாதி சம்பந்தமாக சின்னங்களையோ பயன்படுத்த ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களின் பெற்றோர்களை 3 மாதத்துக்கு ஒரு முறை அழைத்து கூட்டம் நடத்தி குறைகளை கேட்டு அறியவேண்டும்.

ஆசிரியர்கள் மாணவ–மாணவிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகத்தின் முன்பு சந்தேகப்படும்படி யாராவது நின்று கொண்டிருந்தால் உடனே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாகனங்கள் ஏதும் இருப்பின் அவற்றின் பதிவு எண்களை குறித்துக்கொள்ள வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

முறையான அனுமதி இன்றி பள்ளி நேரத்தில் மாணவர்களை வெளியே அனுப்பக்கூடாது. பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவர்களை கண்காணிக்க வேண்டும். நுழைவு வாயில் பகுதியிலும் கேமரா பொருத்த வேண்டும். இதனால் மாணவர்கள் இடையே ஏற்படும் குழு மோதலை தடுக்கலாம். குற்றச்சம்பவங்களையும் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், காஞ்சீபுரம் மாவட்ட நாட்டு நலப்பணி தொடர்பு அலுவலர் தயாளன் மற்றும் அரசு, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story