நர்சிங் படித்து விட்டு பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர் கைது


நர்சிங் படித்து விட்டு பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி பெண் டாக்டர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2017 11:00 PM GMT (Updated: 11 Jun 2017 7:22 PM GMT)

பொன்னேரியில், நர்சிங் படித்து விட்டு பெண்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி,

பொன்னேரி பகுதிகளில் போலி டாக்டர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி அவர், சுகாதார துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையை அடுத்த மாதவரம் அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமை மருத்துவ அதிகாரி டாக்டர் கண்ணகி, பொன்னேரி ஹரிஹரன் பஜார் தெருவில் பி.எஸ்.கிளினிக் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினார்.

பெண் போலி டாக்டர்

அந்த மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. மருத்துவமனையை நடத்தி வரும் பெண் டாக்டரிடம் விசாரணை நடத்திய மருத்துவ அதிகாரி கண்ணகி, அவரிடம் மருத்துவ கவுன்சில் சான்றிதழ்கள் கேட்டார்.

அப்போதுதான் அவர், நர்சிங் படித்து விட்டு தனியார் மருத்துவரிடம் வேலை செய்து வந்ததும், பின்னர் தானே டாக்டர் போல் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர், பொன்னேரி திருவாயர்பாடி லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஷோபனா(வயது 53) என்பதும் தெரிந்தது.

கைது

இதுகுறித்து மருத்துவ அதிகாரி கண்ணகி அளித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போலி பெண் டாக்டர் ஷோபனாவை கைது செய்தார். அவர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பின்னர் கைதான ஷோபனாவை பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையில் மருந்துக்கடை வைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் ஹரி என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருவது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story