ரூ.736 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகள் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


ரூ.736 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகள் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Jun 2017 11:15 PM GMT (Updated: 11 Jun 2017 9:17 PM GMT)

ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.736 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்ட அளவிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி கலையரங்கில் நேற்று காலை நடந்தது.

விழாவுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் -அமைச்சர்

விழாவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு ரூ.692 கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 161 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முக்கிய திட்டமான ஊராட்சிக்கோட்டையில் இருந்து குழாய் மூலம் ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ரூ.484 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள திட்டப்பணியும் அடங்கும். இதைத்தொடர்ந்து ஏற்கனவே ரூ.31 கோடியே 60 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கட்டிடம் உள்பட 50 கட்டிடங்களையும் திறந்து வைத்து பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட கட்சிகளின் தொடக்கப்பள்ளியான இந்த ஈரோடு மண்ணுக்கு வந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் போற்றும் மகத்தான தலைவி ஜெயலலிதாவின் ஆசியோடு ஈரோட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

‘எக்கு’ கோட்டை

ஈரோடு என்று சொன்னாலே ஜெயலலிதாவின் கோட்டை. 2016 சட்டமன்ற தேர்தலிலே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட அனைத்து சட்டமன்ற வேட்பாளர்களும் வெற்றி பெற்று இருக்கக்கூடிய ஒரே மாவட்டம் நம்முடைய ஈரோடு மாவட்டம். ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்த்த மாவட்டம், அவருடைய ‘எக்கு’ கோட்டையாக விளங்குகின்ற மாவட்டம் ஈரோடு மாவட்டம். அப்படி அவருடைய கோட்டையாக விளங்குகின்ற இந்த மாவட்டத்திலே நான் வந்து உரையாற்ற வாய்ப்பினை உருவாக்கித்தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டதற்காக வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலை என்ற ஈரோட்டு வீரமகனை நினைவு கூரும் வகையில் ஈரோடு ஓடாநிலையில் மணிமண்டபமும், அவர் தூக்கிலிடப்பட்ட சேலம் சங்ககிரியில் நினைவு சின்னமும் அமைத்தவர் ஜெயலலிதா.

தந்தை பெரியார் -அண்ணா

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நதிநீர் இணைப்பிற்கு வித்திட்ட காலிங்கராயனுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்திட கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா ரூ.1 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்த மணி மண்டபத்தில் 6 அடி உயரத்தில் காலிங்கராயன் முழுஉருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மணிமண்டபம் திறந்து வைக்கப்படும்.

உலக புரட்சி சிந்தனையாளர்கள் வரிசையில் ஒருவராக விளங்கி, தமிழரின் வழிகாட்டியாக திகழ்ந்த, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இந்த ஈரோட்டு மண்ணில் பிறந்து ஈரோட்டை உலகம் அறியச் செய்தார். தமிழக அரசியலை மாற்றி அமைக்க தன் நாவையும், எழுதுகோலையும் பயன்படுத்திய தமிழகத்தின் முன்னாள் முதல் -அமைச்சர் பேரறிஞர் அண்ணா சில வருடங்கள் தந்தை பெரியாருடன் ஈரோட்டில் தங்கி எழுத்துப் பணியாற்றியுள்ளார்.

புத்துணர்ச்சி

இலக்கியம், வரலாறு, தொல்பொருள் என பல்வேறு சிறப்புகளைப்பெற்ற ஈரோட்டுக்கு வந்துபோவதால் என்னைப் போன்று பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுகின்றது.

பழமையும், பெருமையும் மிக்க ஈரோடு மாநகரம் கட்டமைப்பிலும், சாலை மேம்பாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. அவருடைய விருப்பத்தை நிறைவு செய்வது எங்கள் கடமை.

மேம்பாலம் அமைக்க ஆணை

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்துவதற்கு ஈரோடு-பெருந்துறை-காங்கேயம் ரோடுகள் சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ரூ.58 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் ரூ.484 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கு இன்று (நேற்று) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு மிகப்பெரிய திட்டம். இந்தத் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு நம்முடைய உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரும் உதவியாக இருந்தார்.

பாதுகாக்கப்பட்ட தண்ணீர்...

ஈரோடு மாநகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் உடனடியாக வழங்க வேண்டும் என்று குறுகிய காலத்திலே, அனுமதி அளிக் கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, பணி தொடங்கக்கூடிய சூழ்நிலையை அரசு எடுத்திருக்கிறது. ஆகவே, ஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்குவதற்கு, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டும் பணி, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன இறைச்சிக்கூடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பில் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

புனரமைக்கும் பணி

பொதுப்பணித்துறையின் மூலமாக பள்ளி கல்வித்துறையில் உள்ள 12 உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.20 கோடியே 26 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் கீழ்பவானி பாசனத் திட்டத்திற்கு உட்பட்ட 15 ஆயிரத்து 743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் காலிங்கராயன் வாய்க்காலை ரூ.36 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்(அதாவது நேற்று), மொத்தம் 4 ஆயிரத்து 161 பணிகள் ரூ.692 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அங்கன்வாடி கட்டிடங்கள்

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 20 ஊராட்சிகளில் ரூ.3 கோடியே 42 லட்சத்தில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், 7 ஊராட்சிகளில் ரூ.53 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம், இன்று (நேற்று) ரூ.31 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் 50 பணிகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதைத்தவிர, வருவாய் துறையின் சார்பில் 1,688 பேருக்கு ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்கள், தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள், வன நில உரிமை சான்றுகள் உள்ளிட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.7 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 34 பேருக்கு ரூ.2 லட்சம் செலவில் பல்வேறு உபகரணங்களும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் நடக்கும் அரசால், வேலைவாய்ப்பு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் இன்று (நேற்று) இந்த விழாவில் 3 ஆயிரத்து 701 பேருக்கு ரூ.13 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாலை -பாலங்கள்

ஈரோடு மாவட்டத்தில் 2011-லிருந்து 2017 வரை ரூ.834 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 62 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளும், ரூ.81 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் 47 பாலங்களும் என மொத்தம் ரூ.915 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதைத்தவிர 306 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள் ரூ.246 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலும், ரூ.89 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் 6 பாலங்களும், ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் 5 சிறு பாலங்களுக்குமான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சாஸ்திரி நகரில் சென்னிமலை சாலையில் இருந்து பெரிய சடையம்பாளையம் செல்லும் சாலையில் ரூ.10 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மேம்பாலமும், பெரிய கொடிவேரி மற்றும் அக்கரை கொடிவேரிக்கு இடையே பவானி ஆற்றின் குறுக்கே ரூ.13 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பாலமும் கட்டும்பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், ஈரோடு நகரத்திற்கு வெளி வட்டச்சாலை, ரூ.76 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவால் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.108 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 361 முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டது. மொத்தம் ரூ.736 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

விழாவில் எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, எஸ்.ஈஸ்வரன், இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன், வி.பி.சிவசுப்பிரமணி, உ.தனியரசு, மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகா, ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, தாசில்தார் ஜெயக்குமார், மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story