விளையாட்டு வீரர்களுக்கு கணக்கு தணிக்கை அதிகாரி வாய்ப்பு


விளையாட்டு வீரர்களுக்கு கணக்கு தணிக்கை அதிகாரி வாய்ப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 7:41 AM GMT (Updated: 12 Jun 2017 7:41 AM GMT)

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் கணக்கு தணிக்கை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

இந்திய தலைமை கணக்கு தணிக்கை இயக்குனரகத்தில் இருந்து கணக்குத் தணிக்கையாளர் மற்றும் கணக்காளர் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அக்கவுண்டன்ட் ஜெனரல், கணக்கு தணிக்கை இயக்குனர், பொது கணக்காளர் அதிகாரி மற்றும் கிளார்க் உள்ளிட்ட பணிகள் பல மாநிலங்களில், பல பிரிவுகளில் உள்ளன. கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஆக்கி போன்ற விளையாட்டுகளில் சாதித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆடிட்டர், அக்கவுண்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்–2 தேர்ச்சியுடன், தட்டச்சு தெரிந்தவர்கள் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

ஆடிட்டர், அக்கவுண்டன்ட் மற்றும் கிளார்க் பணி விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

தேர்வுக் கமிட்டி தகுதியானவர்களை தேர்வு செய்யும். கல்வித்தகுதி, விளையாட்டில் பெற்ற சாதனைகள், சான்றிதழ்கள் மற்றும் கள பரிசோதனை ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் தணிக்கையாளரிடம் 2 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆடிட்டர், அக்கவுண்டன்ட் மற்றும் கிளார்க் பணிகளுக்கு தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளன. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, புகைப்படம் ஒட்டி நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு 3–6–2017 தேதியில் வெளியாகி உள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை   www.cag.gov.in  என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story