சூரியனைத் தொடும் ‘பார்க்கர் சோலார்’ திட்டம்!


சூரியனைத் தொடும் ‘பார்க்கர் சோலார்’ திட்டம்!
x
தினத்தந்தி 12 Jun 2017 3:22 PM IST (Updated: 12 Jun 2017 3:22 PM IST)
t-max-icont-min-icon

நமது சூரிய மண்டலத்தின் ஆதார மையமான சூரியன் குறித்த பல தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றன.

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்தது யார் என்று கேட்டால் ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என்று சிறு குழந்தையும் சொல்லிவிடும். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தரையிறங்கி இன்றோடு சுமார் 47 வருடங்கள் முடிந்துவிட்டன. 

தற்போது பிரபஞ்சத்தின் பல கிரகங்கள் மற்றும் நிலவுகள் தொடர்பான பல அறிய உண்மைகளை விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்டறிந்து அசத்தி வந்தாலும், நமது சூரிய மண்டலத்தின் ஆதார மையமான சூரியன் குறித்த பல தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருந்து வருகின்றன. 

சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை!

ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனையே, சுமார் ‘நாற்பது லட்சம் மைல்கள்’ தொலைவில் அல்லது மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை வருகிற 2018–ம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் சூரியனை நோக்கி செலுத்தத் தயாராகி வருகிறோம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது நாசா! 

சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

ஏனென்றால், இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாசா. 

பார்க்கர் சோலார் புரோப்பின் மூன்று முக்கியமான நோக்கங்கள் வருமாறு: 

1) சூரியனில் இருந்து விண்வெளிக்குள் பல லட்சம் கிலோமீட்டர்கள் வரை நீளும், ‘சூரியனுடைய மகுடம்’ என்று அழைக்கப்படும் சோலார் கரோனா  (solar corona) மற்றும் சூரிய புயல் ஆகியவற்றை சூடேற்றி வேகமாக பயணிக்க வைக்கும் சூரிய ஆற்றல் எங்கிருந்து உருவாகிறது என்பதை கண்டறிதல். 

2) சூரிய புயலின் மையத்தில் உள்ள பிளாஸ்மா குழம்பு மற்றும் காந்த மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் இயக்கவியலை தீர்மானிப்பது. 

3) சூரியனில் இருந்து வெளியாகும் ஆற்றல் மிக்க துகள்களை துரிதப்படுத்தி இடம்பெயரச் செய்யும் இயக்க முறைகளை ஆய்வு செய்வது. 

அது சரி, ‘இந்த சூரிய ஆய்வு மூலம் நமக்கு என்ன பயன்?’ என்று கேட்டால், சில நொடிகளில் பூமியை தாக்கி அழித்துவிடக் கூடிய சூரிய புயல் குறித்து அறிந்துகொண்டு அதிலிருந்து பூமியையும், மனிதர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளைக் கண்டறிவதும்தான் என்கின்றனர் விண்வெளி ஆய்வாளர்கள். 

Next Story