பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jun 2017 10:30 PM GMT (Updated: 12 Jun 2017 7:09 PM GMT)

பெரியகுளம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அந்த பகுதியில் உள்ள வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 12, 13 மற்றும் 15–வது வார்டுகளில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

எனவே ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தேனி–பெரியகுளம் சாலையில் கல்லூரி பிரிவு என்னுமிடத்தில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story