வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4½ லட்சம் 100 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் தொழிலாளி கைது


வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4½ லட்சம் 100 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Jun 2017 11:00 PM GMT (Updated: 12 Jun 2017 7:17 PM GMT)

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4½ லட்சம் மதிப்பு 100 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை 100 ரூபாய் நோட்டை கொடுத்து பொருட்களை வாங்கினார். அதனை கடைக்காரர் சோதனை செய்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்க முயன்றபோது, அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து வருசநாடு போலீசாருக்கு கடைக்காரர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருடைய பெயர் ஜோதிபாசு (வயது 34) என்றும், வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்தது.

ரூ.4½ லட்சம் பறிமுதல்

அவருடைய சட்டைப்பையில் 100 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை சோதனை செய்தபோது, அவை கள்ளநோட்டுகள் என்று தெரிந்தது. சிங்கராஜபுரத்தில் உள்ள ஒரு கடையில் கள்ளநோட்டை கொடுத்து பொருட்கள் வாங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஜோதிபாசுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

வருசநாடு அருகே தனது உறவினர் ஒருவரின் வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் இருந்த ஒரு பையில் கத்தை, கத்தையாக 100 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கிருந்து ரூ.4 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக வழக்குப்பதிவு செய்து ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்களான பாலமுருகன், சுரேஷ் ஆகிய 2 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளநோட்டுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story