வடலூரில் ரூ.66 லட்சம் செலவில் சுண்டுக்குழி ஏரி தூர்வாரும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்


வடலூரில் ரூ.66 லட்சம் செலவில் சுண்டுக்குழி ஏரி தூர்வாரும் பணி அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-13T00:59:17+05:30)

வடலூரில் ரூ.66 லட்சம் செலவில் சுண்டுக்குழி ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

வடலூர்,

வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரத்தில் சுண்டுக்குழி ஏரி உள்ளது. இந்த ஏரி நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஏரி ரூ.66 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

323 ஏரி, குளங்களில் தூர்வாரும் பணி

அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி தமிழகம் முழுவதும் ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது 323 ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

வடலூர் பேரூராட்சி சுண்டுக்குழி ஏரியில் என்.எல்.சி.யின் சமுதாய பொறுப்புணர்வு நிதியில் இருந்து ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணி தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி கரையை பலப்படுத்திட முடியும். இதன் மூலம் சுமார் 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தப்படுவதால் வரும் பருவமழை காலங்களில் கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

ஏரியில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதால் பயிர் சாகுபடி மகசூலை அதிகரிக்க செய்ய முடியும். எனவே இந்த பகுதி விவசாயிகள் அனைவரும் இங்கிருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை பெற்று, தங்களது விளை நிலங்களை வளமானதாக மாற்றி, அதிகளவில் பயிர் சாகுபடி செய்திட வேண்டும் என்று கூறினார்.

அய்யன் ஏரி

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி தாசில்தார் ஜான்சிராணி, வருவாய் ஆய்வாளர் கவுரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வடலூர் அய்யன் ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

Next Story