திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கண்களில் கருப்பு துணி கட்டி வந்த இளைஞர்களால் பரபரப்பு


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கண்களில் கருப்பு துணி கட்டி வந்த இளைஞர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 13 Jun 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கண்களில் கருப்பு துணி கட்டி வந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், சிவன்மலை அரசம்பாளையம் அருகே ராயர்வலசு பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் தனது தோட்டத்தின் அசல் பத்திரங்கள் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமான நிலத்தில் சோளம் பயிரிட்டு இருந்ததாகவும் வறட்சியால் கருகி விட்டதாகவும் வறட்சி நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை வறட்சி நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அதனால் தனது ஆவணங்களை ஒப்படைக்க வந்ததாகவும் கூறினார். பின்னர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியதை தொ டர்ந்து ஆவணங்களை எடுத்து அங்கிருந்து அவர் சென்றார்.

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கருப்பு துணியை அகற்றி விட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டணங்களை குறைக்க வேண்டும். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் அவர்கள் நடத்தினார்கள்.

மண்பாண்ட தொழிலாளர்கள்

திருப்பூர் ஊத்துக்குளி தாலுகா வெள்ளிரவெளி எலந்தக்காடு பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர் கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், வெள்ளிரவெளியில் முறைகேடாக சிலர் மண் எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி அனுமதி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஊத்துக்குளி தாசில்தாரிடம் புகார் தெரிவித்தேன். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அலகுமலை ஊராட்சி கோவில்பாளையத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் 5 பேர் மண்பாண்டங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தொழில் செய்து வருகிறோம். நாங்கள் தொழில் செய்து வந்த இடத்தை சிலர் கோவில் கட்டுவதற்காக கம்பி வேலி போட்டு தடுத்துள்ளனர். மண்பாண்டம் தயாரிக்கும்போது கிடைக்கும் சாம்பலை சேகரித்து பொங்கலூர் அருகே உள்ள ராமசாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் விபூதி தயாரித்து கொடுக்கிறோம். தற்போது மண்பாண்டம் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

18 பயனாளிகள்

நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 240 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த 18 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுகவனம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story