ஊட்டி-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


ஊட்டி-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 10:30 PM GMT (Updated: 12 Jun 2017 8:39 PM GMT)

ஊட்டி-கோத்தகிரி சாலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கியது. இந்த நிலையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சில நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் மண் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் ஊட்டி- கோத்தகிரி செல்லும் சாலையின் குறுக்கே பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் ஏதும் வராமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.

மரத்தை வெட்டி அகற்றினர்

அந்த சாலையில் மரம் விழுந்ததால், ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் வாகனங்கள் மற்றும் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்ததும், நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக அவர்கள், அந்த சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை மின்வாள் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால், அங்கு ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலைப்பாதையோரங்களில் உள்ள மரங்கள் அதிகளவில் விழக்கூடிய நிலையில் உள்ளன. தற்போது மழைக்காலமாக உள்ளதால், எதிர்பாராமல் ஆபத்து ஏற்படக்கூடும். ஆகவே அந்த அபாயகரமான மரங்களை கண்டறிந்து, அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story