ஆட்டோ கடன் வழங்க கோரி கலெக்டரிடம் மனு


ஆட்டோ கடன் வழங்க கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Jun 2017 10:30 PM GMT (Updated: 12 Jun 2017 9:07 PM GMT)

ஆட்டோ கடன் வழங்க கோரி கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட சிறுபான்மையினர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாபு தலைமையில் கலெக்டர் கதிரவனிடம் நேற்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட சிறுபான்மையினர் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற் கூட்டுறவு சங்கம் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. சங்கத்தில் 68 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 40 உறுப்பினர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி ரூ.47 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் 40 ஆட்டோக்கள் கடனாக வழங்கப்பட்டன. கடன் முழுவதும் நிலுவையின்றி முழுமையாக தாய்கோ வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் டாம்கோ கடன் பெறாத 21 உறுப்பினர்கள் கடன் பெறுவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு, தனி நபர் கடனாக ரூ. 1 லட்சத்து 96 ஆயிரத்து 650 வீதம் கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அந்த கடன் குறித்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த சங்கத்திற்கு கடந்த 2016-17-ம் நிதியாண்டில் டாம்கோ கடன் வழங்காமல் உள்ளது. எனவே, 2017-18-ம் நிதியாண்டில் 21 உறுப்பினர்களுக்கு ஆட்டோ வாங்க டாம்கோ மூலம் ரூ. 41 லட்சத்து 29 ஆயிரத்து 650 கடன், தாய்கோ வங்கி மூலம் சங்கத்திற்கு வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story