குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2017 10:45 PM GMT (Updated: 12 Jun 2017 9:08 PM GMT)

சித்தலவாய், மாயனூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தலவாய் ஊராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு மின் மோட்டார் பழுதாகி 10 நாட்கள் ஆகியும் சரிசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சித்தலவாய் ஊராட்சி பொதுமக்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப் படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஒன்றிய அதிகாரி களிடம் மனு அளித்தும் பலனில்லை. இதனால் பொதுமக்கள் ஆழ்குழாய் களில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் முனையனூர்-சேங்கல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் மற்றும் மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் முனையனூர்- சேங்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மனு

இதேபோல் மாயனூரில் குடிநீர் பிரச்சினை குறித்து ஏற்கனவே ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் மணல் அள்ளப்படுவதாலும், மணல் லாரிகள் அதிக அளவில் செல்வதால் சாலையோரம் உள்ள குழாய்கள் அடிக்கடி உடைந்து விடுகிறது. மாயனூர் பகுதி பொதுமக்களுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவசுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், மோட்டார் பழுது, குழாய் உடைப்பு பற்றி கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால் இன்று நாங்கள் சாலைக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினர். இதனால் கரூர்- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story