டி.டி.வி.தினகரனின் உருவ படத்தை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீபா பேரவையினர் 52 பேர் கைது


டி.டி.வி.தினகரனின் உருவ படத்தை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீபா பேரவையினர் 52 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2017 4:30 AM IST (Updated: 13 Jun 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், டி.டி.வி.தினகரனின் உருவ படத்தை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீபா பேரவையினர் 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போயஸ் கார்டனில் தீபா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரணை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பூக்கடை ஏ.சரவணகுமார் தலைமை தாங்கினார்.

வக்கீல்கள் தங்கவேலு, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தீபா பேரவை பொறுப்பாளர்கள் டைட்டானிக்தர்மா, செல்லமணி, தங்கமணி மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் செல்வி, கீதா, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டு, டி.டி.வி. தினகரனுக்கு எதிராகவும், தீபாவை தாக்கியவர்களை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அனுமதி மறுப்பு


அப்போது அங்கு வந்த வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் ‘இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்று தீபா பேரவையினரிடம் கூறினார்கள்.

அதற்கு அவர்கள், ‘நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். முதலில் அனுமதி தந்த நீங்கள் இப்போது ஏன் மறுக்கிறீர்கள்?’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சித்தனர்.

52 பேர் கைது

அப்போது தீபா பேரவையினர், தாங்கள் கொண்டு வந்திருந்த டி.டி.வி.தினகரன் உருவ படத்தை ஆவேசமாக கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டதை தீவிரப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் 8 பெண்கள் உள்பட 52 பேரை கைது செய்து ஒரு மினி பஸ்சில் ஏற்றி, வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

1 More update

Next Story