கலசபாக்கம் அருகே ஒருவர் அடித்துக்கொலை ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்


கலசபாக்கம் அருகே ஒருவர் அடித்துக்கொலை ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 12 Jun 2017 10:45 PM GMT (Updated: 12 Jun 2017 9:16 PM GMT)

கலசபாக்கம் அருகே ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் ரெயில் தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் கிடந்ததால் போலீசார் அதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலசபாக்கம்,

கலசபாக்கத்தை அடுத்த அகரம் சிப்பந்தி ரெயில் நிறுத்தம் அருகே ரெயில் தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை பார்வையிட்டனர். அப்போது அவர், ரெயிலில் அடிபட்டு இறக்கவில்லை என்பதும், மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு, அதனை மறைப்பதற்காக ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றிருப்பதும் தெரியவந்தது.

அதையடுத்து திருவண்ணாமலை ரெயில்வே போலீசார், இதுகுறித்து கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் அவர்?

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதும், அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் உடலை வீசிய மர்ம நபர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story