நசரத்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


நசரத்பேட்டை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2017 10:42 PM GMT (Updated: 12 Jun 2017 10:42 PM GMT)

நசரத்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 30). இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.

நசரத்பேட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய வெங்கடேசன், கீழே விழுந்தார். அப்போது அதே லாரியின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய வெங்கடேசன், தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் பிரகாஷ்(35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருப்போரூரை அடுத்த முள்ளிபாக்கத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மனைவி ராணி(52). இவர், படாளம் அருகே பழையனூர் சாலை பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த ராணி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த படாளம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர்குமார், பலியான ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story