சாலையை கடக்க முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கார் மோதி பலி டிரைவர் கைது


சாலையை கடக்க முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கார் மோதி பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2017 11:05 PM GMT (Updated: 12 Jun 2017 11:05 PM GMT)

பல்லாவரத்தில் சாலையை கடக்க முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கார் மோதி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை காமராஜர் நகர், நாகரத்தினம் தெருவை சேர்ந்தவர் முகமது ரிசான்(வயது 32). தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றார். அப்போது கிண்டி நோக்கி சென்ற கார் ஒன்று முகமது ரிசான் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

கார் மோதி பலி

இதில் பலத்த காயம் அடைந்த முகமது ரிசானை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முகமது ரிசான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பல்லாவரம், பெரிய பாளையத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்த, முருகன் (25) என்பவரை கைது செய்தனர்.

பஸ் கண்ணாடி உடைப்பு

* சென்னை பாடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தீபக் மரக் (22) வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, மேற்கூரை இடிந்து விழுந்ததில் தீபக் மரக் உயிரிழந்தார்.

* தாம்பரம் இரும்புலியூர் சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்ற, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38), அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

* நீலாங்கரை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (28) என்பவருக்கும், துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் (28) முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் பிரகாஷ், சுகுமார் ஆகியோர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் மணிகண்டன், சுரேஷ், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

* தாம்பரத்தை அடுத்த பாரதிநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் புஸ்பா (50). இவர் நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, அங்கு மறைந்து இருந்த மர்மநபர் புஸ்பாவை கத்தியைக்காட்டி மிரட்டி வீட்டின் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடிச்சென்றார்.

* மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த தங்கமணியை (22) சென்னை கோட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.

* அயனாவரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் மீது பீர் பாட்டில் மற்றும் கற்களை வீசி கண்ணாடியை உடைத்ததாக, அயனாவரத்தை சேர்ந்த ஹரி (21), நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த பரத் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்கொலை

* வேலைக்கு செல்லாமல் இருந்ததை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்ததால் விரக்தி அடைந்த வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகர் (40) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* திருவொற்றியூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலியை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் திருவான்மியூர் சிங்காரவேலர் நகரை சேர்ந்த சீனிவாசன் (33) கோபித்துக்கொண்டு 3–வது மாடிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

* தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்து ரூ.1 லட்சம், 2 செல்போன்கள் மற்றும் மடிக்கணினியை திருடிச்சென்றனர்.

* பல்லாவரம் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி அஸ்தினாபுரம் பஸ்நிலையம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

* எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் உள்ள பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அனுசுயாவை (26) தாக்கி, செல்போனை பறித்துச்சென்ற கண்ணகி நகரை சேர்ந்த சக்தி (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story