தாழையூத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
தாழையூத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நேற்று பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தாழையூத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நேற்று பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகள்நெல்லை அருகே உள்ள தாழையூத்து ரெயில்வே கேட் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து மது வாங்கி செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே அங்கு எப்போதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
நேற்று போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சென்றனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து, டாஸ்மாக் கடைகள் இருப்பதால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே இந்த கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி ஒரு கடையை அவர்களே மூடினர். அதை பார்த்து மற்றொரு கடையை ஊழியர்களே பூட்டினர்.
முற்றுகை போராட்டம்இதையடுத்து டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை தாசில்தார் பாலமுருகன், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தாசில்தார், உங்களது கோரிக்கையை நீங்கள் மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்தில் கொடுங்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். போலீசார் தாங்கள் பிடித்து சென்ற 3 பேரையும் விடுவிப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.