மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தரவில்லை அ.தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை


மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தரவில்லை அ.தி.மு.க. அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை
x
தினத்தந்தி 12 Jun 2017 11:58 PM GMT (Updated: 12 Jun 2017 11:58 PM GMT)

மாடன்குளத்தில் தி.மு.க. சார்பில் தூர்வாரும் பணிகளை மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தரவில்லை என்றும், மக்களை பற்றி கவலைப்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தூர்வாரும் பணியை பார்வையிட்டார்


தூத்துக்குடி சில்வர்புரம் அருகே உள்ள மாடன்குளத்தில் தி.மு.க. சார்பில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆய்வு செய்து வருகிறேன்

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், கழகத்தின் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள், கால்வாய்களை எல்லாம் தூர்வாரி, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். அதேபோல, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லாத தொகுதிகளில் தி.மு.க. நிர்வாகிகளும் அந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தின் அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் இணைந்து நீர் நிலைகளை தூர்வாரும் பணியினை சிறப்புடன் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தப் பணிகளை எல்லாம் நானே நேரடியாகச் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன்.

அமைச்சர்களின் பொய் தகவல்

தூத்துக்குடிக்கு வந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன், எங்களுடைய தொகுதியிலும் குளங்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம், அதனை நீங்கள் பார்வையிட வேண்டும், என்று என்னிடத்தில் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், இந்தப் பணியை பார்வையிட்டு உள்ளேன்.

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த பினாமி ஆட்சியானது, நீட் தேர்வாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினைகளாக இருந்தாலும், நெடுவாசல் பிரச்சினையாக இருந்தாலும், இவை போன்ற பல பிரச்சினைகளில், சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டு இருக்கும் பிரச்சினைகளில் கூட மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை வழங்கவில்லை. இதையெல்லாம் நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், முதல்-அமைச்சரும், துறை அமைச்சர்களும் தவறான தகவல்களை பொதுமக்களிடம் சொல்லி வருகிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்பது, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்துள்ள விளக்கத்தின் மூலம் வெளியாகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டபோது மாநில அரசு எந்த வித எதிர்ப்பையும் சொல்லவில்லை, கருத்தையும் சொல்லவில்லை என்பதை மத்திய மந்திரியே வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இந்த அரசு பினாமி அரசு தான் என்பதற்கு இதைவிட வேறு ஒரு சான்றை, உதாரணத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இரு நாட்களுக்கு முன்பு, மத்திய மந்திரி வெங்கையாநாயுடு, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதில் மத்திய அரசுக்கு எந்த வித தொடர்புமில்லை, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது பற்றி மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு, டெல்லிக்குச் சென்று கூட போராடினார்கள். ஆனால், மாநில அரசு அதுபற்றி எல்லாம் கவலையே படாமல் இருக்கிறது.

கவலைப்படவில்லை

மாநில அரசு உடனடியாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், என ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியும், அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற இந்த மாநில அரசு முன்வரவில்லை. 100 நாள் சாதனை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, அ.தி.மு.க. அரசு மக்களைப்பற்றி எந்தக் கவலையும் படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story